லாக்டவுன் காலத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டணக் கொள்ளை அடிக்கிறதா என்று கேள்வி எழுப்பிய நடிகர் பிரசன்னா தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31 வரை நான்கு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது சில தளர்வுகளுடன் ஜூன் 30 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக கொஞ்சம், கொஞ்சமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

மின் பயன்பாட்டு அளவீடு

கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் வீடு வீடாக சென்று மின் பயன்பாட்டை அளவீடு செய்யவில்லை. மாறாக அதற்கு முந்தையக் கட்டணத்தை செலுத்தச் சொன்னார்கள்.

கூடுதல் கட்டணம்

தற்போது வீடு வீடாக சென்று மின் பயன்பாட்டு அளவீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அதில் சில குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. முந்தையக் கட்டணத்தை செலுத்தியவர்களுக்குக்கூட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கேள்வி?

மின் கட்டண விவகாரம் குறித்து நடிகர் பிரசன்னா தனது டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் “இந்த லாக்டவுன் காலத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டணக் கொள்ளை அடிப்பதாக உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகப்படியான கட்டணம்

இந்த நிலையில், தனது கேள்வி குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் பிரசன்னா விளக்கமளித்துள்ளார். அதில் அவர் பேசுகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளை அடிப்பதாக சொல்லவில்லை. ஆனால் பொது முடக்கத்திற்கு பிறகு அதிகப்படியான கட்டணம் வந்திருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர். மின்சார வாரிய ஊழியர்கள் செலுத்திய தொகையை மட்டும் கழிக்கிறார்களே தவிர, யூனிட் தொடர்பாக எந்த கணக்கும் எடுப்பதில்லை. எனவே அனைவரும் எதிர்பார்த்ததைவிட அதிக கட்டணம் வந்துள்ளது. வேலையில்லாமல் வருமானமில்லாமல் தவிக்கும் இந்த சூழலில் பலருக்கு இது அதிர்ச்சி தரக்கூடும் செய்தியே என பிரசன்னா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here