வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு வரும் பணியில் ஈடுபட்டிருந்த ஏர் இந்தியா விமானிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட போது, ஏர் இந்தியா ஊழியர்கள் அலைக்கழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விமானிக்கு கொரோனா
5 ஏர் இந்தியா விமானிகளுக்கு கடந்த மே மாதம் 10-ஆம் தேதியன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த சனிக்கிழமை மற்றுமொரு ஏர் இந்தியா விமானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட விமானி ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை மீட்டு வரும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவரையும், இவருடன் பணியாற்றிய மற்ற விமானிகளையும் சரியாக நடத்தாமல் துன்புறுத்தப்பட்டதாக ஏர் இந்தியா விமானிகள் சங்கம் தற்போது குற்றம்சாட்டி உள்ளது.
பாதியில் திருப்பப்பட்ட விமானம்
ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக டெல்லியிலிருந்து ரஷ்யாவின் மாஸ்கோ நோக்கி கடந்த சனிக்கிழமை ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. பயணிகள் யாரும் இன்றி அனுப்பப்பட்ட அந்த விமானத்தில் வேலை செய்த பணியாளர்களின் கொரோனா தொற்று குறித்த மருத்துவ பரிசோதனை முடிவு, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெளிவந்தது. அதில் அந்த விமானத்தில் இருக்கும் விமானி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. அப்போது அவ்விமானம் உஸ்பெகிஸ்தான் நாட்டின் எல்லைக்குள் நுழைந்துவிட்டதையடுத்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு புதுடெல்லிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டது. உடனடியாக விமானம் திருப்பப்பட்டு புதுடெல்லியில் தரையிறக்கப்பட்டது.
துன்புறுத்தல்
கொரோனா பாதித்த விமானி கடும் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஏர் இந்தியா விமானிகள் சங்கம் தற்போது குற்றம்சாட்டியுள்ளது. அச்சங்கம் ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தில், ‘‘கொரோனா பாதித்த விமானி கடுமையாக அலைக்கழிக்கப்பட்டார். மற்ற சக விமானிகளுக்கும் உணவு தரப்படவில்லை. ஒருநாள் முழுவதும் உணவில்லாமல் அலைக்கழிக்கப்பட்டதோடு, கழிவறைக்கு செல்லக்கூட அனுமதிக்கப்படவில்லை.
தனிமை
அரசு மருத்துவமனையில் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, அவரை 14 நாள் வீட்டு தனிமையில் இருக்க அனுமதித்தனர். இந்த விஷயத்தில் எந்த நடைமுறையையும் மருத்துவ அதிகாரிகள் முறையாக பின்பற்றவில்லை என கூறப்பட்டுள்ளது.
ஆதங்கம்
இதுபோன்ற துன்புறுத்தல் இருந்தால், தங்களால் எப்படி விமானங்களை இயக்க தைரியத்துடன் பணிக்கு வர முடியும்” என்ற கேள்வியோடு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர் விமானிகள் சங்க உறுப்பினர்கள்.