கேளிக்கை வரி சதவிகிதத்தை முழுவதுமாக ரத்து செய்தால் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும் போது டிக்கெட் விலை குறையும் என தியேட்டர் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு, தளர்வு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 5ம் கட்டமாக ஜூன் 30ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் சில தளர்வுகளை அளித்து ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அனுமதி இல்லை
நோய் தொற்று பரவலை பொறுத்து சிறு மற்றும் குறுந்தொழில்கள், அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என எல்லா தொழில்களையும் நடத்துவதற்கு சில விதிமுறைகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், முதலில் மூடப்பட்ட தனி தியேட்டர்கள், மால், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை மீண்டும் திறப்பதற்கு அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.
வருவாயின்றி தவிப்பு
இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வருவதால், அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில், பிற தொழில்களுக்கு சில விதி முறைகளுடன் அனுமதி வழங்கியது போல் தியேட்டர் தொழிலை மீண்டும் தொடங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழிலாளர்கள் அவதி
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாங்கத்தின் எந்த விதமான சலுகைகளும் இன்றி சொந்த முதலீட்டில் நடைபெற்று வந்த தியேட்டர் தொழில் அரசுக்கு வருவாய் தரக்கூடியது. இந்த தொழில் மூலம் சுமார் 50,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைத்து வந்தது. மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் சமூக இடைவெளியின் அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கட்டுகள் விற்பனை செய்து பார்வையாளர்களை அனுமதிக்க முடியும். ஆனால், அதற்கு அரசு முதலில் அனுமதி அளிக்க வேண்டும். தியேட்டர்களையே நம்பி வாழும் குடும்பங்களை நினைவில் கொண்டு அரசு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
வரிச் சலுகை வேண்டும்
தற்பொழுது நடைமுறையிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரி 8 சதவீதம். இதை முழுவதுமாக ரத்து செய்வதன் மூலம் டிக்கெட் கட்டணம் குறையும். தனி திரையரங்குகளுக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவிகிதமாக குறைத்து நிர்ணயம் செய்ய மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தற்பொழுது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் டிக்கெட் 84 ரூபாய்க்கு விற்க முடியும்.
மின்கட்டணத்தில் சலுகை
மேற்கூறிய கோரிக்கைகளை நிறைவேற்றினாலும் தியேட்டர்களுக்கு 10% பார்வையாளர்கள் மட்டுமே வர வாய்ப்பு உள்ளது. எனவே, நலிவடைந்து வரும் திரைப்படத் தொழிலை அரசு கைகொடுத்து முன்னேற்ற வேண்டும். கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தியேட்டருக்கான மின் கட்டணத்தில் 50 சதவிகிதம் சலுகை தர வேண்டுகிறோம். முழு முடக்க காலம் வரை திரையரங்கிற்கான சொத்து வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.