கேரளாவில் தென்மேற்குப் பருவமழை வழக்கம்போல் ஜூன் 1-ம் தேதி தொடங்கியதாக இந்திய வானிலை மையம் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை
நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையானது ஜூன் 5-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயலாலும் அரபிக்கடலில் தற்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாலும் தென்மேற்குப் பருவமழை வழக்கமான நாளான ஜூன் 1-ம் தேதியிலேயே தொடங்கிவிட்டது.
மஞ்சள் எச்சரிக்கை
இதனால், கேரளாவிலுள்ள 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் என்பதால் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கண்ணூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயம் செழிக்கும்
தென்மேற்குப் பருவமழை வாயிலாகத்தான் கேரளாவிற்கு தேவைப்படும் 75 சதவீத நீரும், தமிழ்நாட்டுக்குத் தேவைப்படும் 15 சதவீத நீரும் கிடைக்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்குப் பருவமழை சீராக இருப்பதே விவசாயத் துறை செழிக்கவும் ஆதாரமாக இருக்கிறது.
இயல்பான மழைக்கு வாய்ப்பு
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் மிருத்துயுன்ஜெய் மொகபத்ரா கூறுகையில், “கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான அனைத்துக் காரணிகளும் பொருந்தியுள்ளன. இந்த ஆண்டு இயல்பான மழை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 2-வது கட்ட அறிவிப்பு நாளை அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
பருவமழை
தனியார் வானிலை மையமான ஸ்கைமெட் மே மாதம் 30-ம் தேதியே தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 1-ம் தேதிதான் தொடங்க வாய்ப்பிருப்தாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
இதனிடையே, தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.