மக்களின் ஒத்துழைப்பே கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நீட்டிப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ந் தேதி முதல் 4 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காலம் இன்றுடன் நிறைவடைய உள்ளதையொட்டி, ஜூன் 30ந் தேதி வரை சில தளர்வுகளுடன் 5ம் கட்ட ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
மோடி உரை
இந்த நிலையில், மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் உறுதியுடன் செயல்பட்டதால், இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புகளும், உயிரிழப்புகளும் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். மக்களின் ஒத்துழைப்பே கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் எனவும் அவர் கூறினார்.
மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு
மேலும் அவர் பேசுகையில்; உயிரிழப்புகள் குறைந்ததற்கும், நோய் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கும் மருத்துவ பணியாளர்கள் ஆற்றிய பணி மிகவும் பாராட்டத்தக்கது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர்.
அறிவுரை
6 அடி சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடியுங்கள். முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்த்திடுங்கள். தனிமனித இடைவெளியை கடைபிடித்தால்தான் கொரோனாவில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும் என பிரதமர் மோடி தெரிவித்தார். மதுரையில் சலூன் கடை நடத்தி வரும் மோகன் என்பவர் செய்த நிவாரண உதவி குறித்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.