சென்னையில் கொரோனா பரவலை தடுக்க வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஓரளவிற்கு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும், சென்னையில் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிகரிக்கும் பாதிப்பு
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று 874 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 618 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. நேற்று 765 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 11,313 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
அச்சப்பட வேண்டாம்
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றார். கொரோனா குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் கொரோனா நோயாளிகளிடம் வேறுபாடு காட்டாதீர்கள் எனவும் கேட்டுக் கொண்டார். சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இனிவரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.