சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைத்துள்ளதாக மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
முதல்வருடன் சந்திப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மருத்துவ நிபுணர் குழுவினர் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவ நிபுணர் குழு, மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் சென்னையில் பாதிப்பு அதிகம் உள்ளது என்றனர். சோதனைகளை அதிகப்படுத்துவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் கூறினர்.
பாதிப்பு அதிகம்
மேலும் அவர்கள் கூறுகையில்; கொரோனா ஒரு புதிய வைரஸ் என்பதால் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தி வருகிறோம். கொரோனா பாதிப்பு மக்கள் தொகை அதிகமாக உள்ள சென்னையில் அதிகமாக இருக்கிறது. சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது.
பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்
கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பொதுமக்கள் முக கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும். மக்கள் அறிகுறி தென்பட்ட தொடக்க நிலையிலேயே மருத்துவர்களை அணுக வேண்டும். இருமும் போது கைகளை மூடிக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். பீதியைக் கிளப்புவதை தவிர்க்க வேண்டும்.
4 மாவட்டங்களுக்கு நீட்டிப்பு?
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஊரடங்கை நீட்டிப்பது நல்லது. தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை. சென்னையில் பொது போக்குவரத்துக்கு பஸ், ரயிலை இயக்கக்கூடாது. வழிபாட்டுத் தலங்களை திறக்கக்கூடாது. சென்னையில் கொரோனா பரவல் சமூக பரவலாக மாறவில்லை. கொரோனாவில் இருந்து வயதானவர்களை குடும்ப உறுப்பினர்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு மருத்துவ நிபுணர் குழு கூறியுள்ளது.