பெங்களூருவிலிருந்து சொந்த ஊரான கேரளாவுக்கு சென்ற பிரபல நடிகை பாவனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சிறந்த நடிகை
தமிழில் தீபாவளி, சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான் உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பாவனா. தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார். கன்னடத்தில் பாவனா நடித்த படத்தை தயாரித்த நவீனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்ததை அடுத்து இருவரும் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
மீண்டும் நடிப்பு
திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியான ’96’ படத்தின், கன்னட ரீமேக்கில் நடித்தார். இப்போது, சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் பஜராங்கி 2 என்ற படத்தில் பாவனா நடித்து வருகிறார். மேலும், இன்ஸ்பெக்டர் விக்ரம் 2020, கோவிந்தா கோவிந்தா ஆகிய கன்னட படங்களிலும், மலையாளத்திலும் நடித்து வருகிறார்.
தனிமைப்படுத்தப்பட்டார்
இந்நிலையில் லாக்டவுன் காரணமாக பெங்களூரில் கணவர் வீட்டில் இருந்த பாவனா, சொந்த ஊரான திருச்சூர் செல்ல முடிவு செய்தார். அதன்படி, பெங்களூரில் இருந்து கேரள எல்லையான முத்தங்கா வரை கணவர் நவீனுடன் காரில் வந்த நடிகை பாவனா, அங்கிருந்து தனது சகோதரருடன் திருச்சூருக்குச் சென்றார். இதையடுத்து அவருக்கு அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அறிகுறி ஏதும் இல்லை என்றாலும், அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.