சென்னையில் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணியரை ஏற்றிச் செல்ல ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ

சென்னைவாசிகள் பேருந்திற்கு அடுத்தபடியாக ஆட்டோக்களையே தங்களின் போக்குவரத்து தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் குறுகிய நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு சேர்ப்பதில் ஆட்டோவுக்கு முக்கிய பங்கு உண்டு. சென்னை மக்களின் அபிமானமான இந்த ஆட்டோக்களை, நகர சாலைகளில் எங்கு திரும்பினாலும் பார்க்க முடியும்.

வெறிச்சோடிய சாலைகள்

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பொது போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது. மக்கள் வீடுகளிலேயே முடங்கியதால், சாலை வெறிச்சோடின.

அனுமதி இல்லை

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் படிப்படியாக சில போக்குவரத்து வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், சென்னையில் நோய் தொற்று அதிகரிப்பின் காரணமாக ஆட்டோ மற்றும் கால் டாக்சி உள்ளிட்ட சில போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

விமான சேவை

ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு நேற்று முதல் உள்நாட்டு விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. ஆனால், விமான நிலையங்களுக்கு செல்வோருக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் அது பெரும் சிரமமாக இருந்து வந்தது. சொந்த வாகனம் வைத்திருப்போர் மட்டுமே விமான நிலையத்திற்கு செல்ல முடியும் என்ற நிலை நேற்று வரை நீடித்தது.

ஆட்டோக்களுக்கு அனுமதி

இந்நிலையில் விமான நிலையத்திற்கு செல்வோருக்கு வசதியாக ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சிகளை இயக்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு முன், சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் ஆட்டோக்களை இயக்க கடந்த 23ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. ஓட்டுநரை தவிர்த்து, ஒரு பயணியை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அதற்கு விதிக்கப்பட்டுள்ளன.

தளர்வு

இப்போது அந்த தளர்வு சென்னைக்கும் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், தங்கள் அபிமான ஆட்டோ ரிக்ஷாக்களை சென்னைவாசிகள் இனி அவ்வப்போது சாலைகளில் காண முடியும். விமான நிலையத்திற்கு செல்வதற்காக இந்த வசதி உருவாக்கப்பட்டு இருந்தாலும், சமூக விஷயங்களை சரியாக கடைபிடித்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here