உடுமலை நாராயணகவி மறைந்த தினம்
உடுமலை நாராயணகவி என்கிற நாராயணசாமி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார். விடுதலைப் போராட்டத்தின்போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர். முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்பக் காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன. 1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர். நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.
ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.
அண்ணாத்துரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா திரைப்படங்களுக்கும், பிரபாவதி, காவேரி, சொர்க்கவாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்யபாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர்.
ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.
நிகழ்வுகள்
1805 – நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் மன்னனாக முடி சூடினான்.
1813 – தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று விடுவிப்பாளர் எனத தன்னை அறிவித்தார்.
1846 – மெக்சிக்கோ ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தது.
1865 – வாஷிங்டன், டிசியில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றமை கொண்டாடப்பட்டது.
1915 – முதலாம் உலகப் போர்: இத்தாலி ஆஸ்திரியா-ஹங்கேரி மீது போரை அறிவித்தது.
1929 – மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் “கார்னிவல் கிட்” வெளி வந்தது.
1949 – ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது.
1951 – திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கையெழுத்திட வைக்கப்பட்டார்கள்.
1958 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.
1998 – புனித வெள்ளி உடன்பாட்டிற்கு ஆதரவாக வட அயர்லாந்து மக்களின் 71 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.