மாதவன், அனுஷ்கா நடிப்பில் உருவான நிசப்தம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதாக வெளியான தகவல் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். 
தியேட்டர்கள் மூடல்
ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிக்கப்பட்டு ரிலீசுக்கு தயாராக உள்ள பல படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் திணறி வருகின்றனர். மூடப்பட்டுள்ள தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், தயாராக உள்ள பல படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட முயன்று வருகின்றனர்.
ஓடிடியில் ரிலீஸ்
தமிழில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ ஆகிய படங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அனுஷ்கா நடித்து ‘நிசப்தம்’ திரைப்படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆவதாக தகவல் பரவியது.
தயாரிப்பாளர் மறுப்பு
இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் கோனா வெங்கட் மறுத்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், எங்களின் நிசப்தம் என்ற படத்தின் ரிலீஸ் பற்றி யூகத்தின் அடிப்படையில் பல தகவல்கள் பரவி வருகிறது. ஒன்றை மட்டும் விளக்கி கூற விரும்புகிறோம், ‘தியேட்டர் ரிலீஸுக்கு தான் நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம்’. ஆனால் ஒருவேளை சூழ்நிலை சரியாக அமையாமல் நீண்ட காலத்திற்கு இருந்தால் நாங்கள் மாற்று வழியான ஓடிடி தளத்தை தேர்ந்தெடுப்போம். சிறந்தது நடக்கும் என நம்பிக்கை வைப்போம்” என கூறியுள்ளார்.















































