உலக உயர் ரத்த அழுத்த தினம்
ரத்தக் கொதிப்பு என்னும் உயர் ரத்த அழுத்த நோய் என்பது உலகம் முழுவதும் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாறுபட்ட உணவு பழக்க வழக்கங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலையில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை சரியான சமயத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், இறப்புக்கும் வழிவகுக்கும்.
உலக சுகாதார அமைப்பானது, உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒரு உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை 2005-ல் தொடங்கியது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே 17-ம் தேதி உலக உயர் ரத்த அழுத்த தினமாக அனுசரிக்க முடிவு செய்து அறிவித்தது.
இந்த நாளில் உலக நாடுகள் அனைத்தும், அரசாங்கங்கள், தொழில்முறை சமுதாயங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்து பொது பேரணிகள் மூலம் உயர் ரத்த அழுத்த விழிப்புணர்வை ஊக்குவித்து வருகின்றன. இணையதளம் மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகத்திலும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இடம்பெறுகின்றன.
இலங்கை இறுதிக்கட்ட போர்
இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும், ராணுவத்திற்கும் இடையே 1983-ம் ஆண்டு முதல் தொடர்ந்து சண்டை நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த உள்நாட்டுப் போரின் உச்சகட்டமாக 2009-ம் ஆண்டு ராணுவம் உக்கிரமான தாக்குதலை நடத்தியது.
2009ம் ஆண்டு மே 17-ம் தேதி இடைவிடாமல் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
நிகழ்வுகள்
1498 – வாஸ்கோடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.
1521 – பக்கிங்ஹாமின் மூன்றாவது நிலை சீமானான (Duke) எட்வர்ட் ஸ்டாஃபேர்ட் தூக்கிலிடப்பட்டான்.
1590 – டென்மார்க்கின் ஆன் ஸ்காட்லாந்து அரசியாக முடி சூடினாள்.
1792 – நியூயார்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.
1809 – பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டான்.
1814 – நார்வே நாட்டின் அரசியல் நிர்ணயம் அமைக்கப்பட்டது.
1915 – பிரித்தானியாவின் கடைசி லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.