கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான நான்காவது ஊரடங்கு வித்தியாசமாக இருக்கும் எனவும் இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் உரை
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உலகம் முழுவதும் கொரோனாவால் 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். ஒரு வைரஸ் உலகத்தில் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
போராடும் இந்தியா
கடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு எதிராக இந்தியா கடுமையாக போராடி வருவதாக குறிப்பிட்ட மோடி, ஒரு முக்கிய வாய்ப்பை நமக்கு இந்த சூழ்நிலை கொடுத்துள்ளது என்றார். கொரோனாவுடன் போராடி உயிர்களையும் காக்க வேண்டும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்த வேண்டுமென பிரதமர் மோடி தெரிவித்தார்.
ரூ. 20 லட்சம் கோடி நிதி
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ. 20 லட்சம் கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்த பிரதமர், இதுதொடர்பாக நாளை நிதியமைச்சகம் விளக்கமளிக்கும் எனத் தெரிவித்தார். வலிமையான பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
மக்களுக்கு வேண்டுகோள்
யாரையும் சார்ந்திராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் என 130 கோடி நாட்டு மக்களும் உறுதி ஏற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். கொரோனா பாதிப்பை ஏழை, எளிய மக்கள் தைரியத்துடன் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்தப் போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை கூறினார். கொரோனாவிடம் இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிந்து, தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகான நான்காவது ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனவும் அந்த ஊரடங்கு தொடர்பான விவரங்கள் மே 18-ம் தேதிக்கு முன்னதாகவே அறிவிக்கப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாநிலங்களின் பரிந்துரையின் அடிப்படையில் 4-ம் கட்ட ஊரடங்கு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.