வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக கள்ளக்காதலியே காதலனை தீர்த்துக் கட்டிய சம்பவம் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இளைஞர் கொலை

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பாலாற்றங்கரையில் கடந்த 10ஆம் தேதி இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திய போது, கொலை செய்யப்பட்ட நபர் வஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சுனில் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

கள்ளக்காதல்

கொலை செய்யப்பட்ட சுனில், சர்க்கார் தோப்பு பகுதியில் உள்ள கோகிலா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான கோகிலாவின் இந்த செயல், அவரது கணவர் இப்ராஹிமுக்கு தெரிந்துவிட்டது. இதுதொடர்பாக கோகிலாவை கண்டித்த அவரை, சுனில் கடுமையாக தாக்கியுள்ளார். மனைவியின் செயலால் மனமுடைந்த இப்ராஹிம், தனது இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி, தனியாக வாழ்ந்து வருகிறார்.

அடிக்கடி உல்லாசம்

கணவர் இல்லாதது மிகவும் வசதியாக போனதால் கோகிலா கள்ளக்காதலன் சுனிலை அடிக்கடி வரவழைத்து இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். சுனில் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், தன்னை ரவுடி போலவே காட்டிக் கொண்டு அப்பகுதியில் வலம் வந்துள்ளார்.

மற்றொருவருடன் கள்ளக்காதல்

இந்த நிலையில், சுனிலுக்கு அடுத்தபடியாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மணிகண்டன் என்பவருடன் கோகிலாவுக்கு காதல் மலர்ந்துள்ளது. இதனை கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த சுனில், கோகிலாவை அடித்து உதைத்தாக கூறப்படுகிறது. கஞ்சா போதைக்கு அடிமையான சுனில் தினமும் கோகிலாவை அடித்து துன்புறுத்தியதால் அவரை தீர்த்துக்கட்ட கோகிலாவும் மணிகண்டனும் முடிவு செய்துள்ளனர்.

வெட்டிக் கொலை

சம்பவத்தன்று போதையில் வீட்டிற்கு வந்த சுனிலை, கோகிலா, மணிகண்டன், அவரது கூட்டாளி சதீஷ்குமார், கோகிலாவின் தந்தை ஆகியோர் சரமாரியாக அடித்தும், வெட்டியும் கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை சர்க்கார் தோப்பு பகுதியில் வீசிவிட்டு தப்பிவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தலைமறைவு

இந்த வழக்கில் மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளி சதீஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள கோகிலா மற்றும் அவரது தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here