தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
10-ம் வகுப்பு தேர்வு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பட்டது. இந்த தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்றார்.
தேர்வு அட்டவணை;
ஜூன் 1 – மொழிப்பாடம்
ஜூன் 3 – ஆங்கிலம்
ஜூன் 5 – கணிதம்
ஜூன் 6 – விருப்ப பாடம்
ஜூன் 8 – அறிவியல்
ஜூன் 10 – சமூக அறிவியல்
ஜூன் 12 – தொழிற்பிரிவு
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு
பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு ஜூன் 2-ம் தேதி நடைபெறும் என்றும் 12-ம் வகுப்பை சேர்ந்த 36,842 மாணவர்களுக்கு ஜூன் 4-ந் தேதி தேர்வு நடைபெறும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மே 27-ந்தேதி தொடங்கும் எனக் கூறினார்.
பள்ளிகள் திறப்பு?
பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என செங்கோட்டையன் தெரிவித்தார். அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் எனவும் 10 கல்லூரிகளில் நீட் பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.