கொரோனா ஊரடங்கு வரும் 17 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு, வருகிற 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஆலோசனை
இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. இந்த நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதம்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது சில கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பதா? என்பது குறித்த முக்கிய முடிவுகள், பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
முதல்வர் கோரிக்கை
பிரதமரின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, வரும் மே 31ம் தேதி வரை ரயில், விமான சேவைகளை தொடங்க வேண்டாம். குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருள் வழங்க, கூடுதல் தானியம் வழங்க வேண்டும்.
ரூ.2000 கோடி தேவை
நடப்பு நிதியாண்டில் 33 சதவீத தொகை, நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை வழங்க வேண்டும். கொரோனாவுக்கு மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சையால், தமிழகத்தில் உயிரிழப்பு 0.67% ஆக உள்ளது, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27% பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தடுப்பு பணிக்கு தமிழகத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கிட சிறப்பு நிதியாக உடனடியாக ரூ.2000 கோடி வழங்க வேண்டுமென வலியுறுத்தியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.