கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மெத்தனமாக இருக்கக்கூடாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மெத்தனமாக இருக்கக்கூடாது
இது ஒரு டெஸ்ட் போட்டி போன்றதாகும். டெஸ்ட் போட்டி வெறும் 5 நாட்கள் தான் நடைபெறும். ஆனால் இது நீண்டதாக உள்ளது. டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் தலா 2 இன்னிங்ஸ் மட்டுமே உண்டு. ஆனால் இதில் அதனை காட்டிலும் அதிகமாக இருக்கலாம். முதல் இன்னிங்சில் நாம் சற்று முன்னிலையில் இருக்கிறோம் என்பதற்காக மெத்தனமாக இருக்கக்கூடாது. ஏனெனில் 2-வது இன்னிங்ஸ் உண்மையில் மிகவும் கடினமாக இருக்கலாம்.
கொரோனாவுக்கு எதிரான போர்
கொரோனா போராட்டத்தில் நாம் முழுமையான வெற்றியை பெற வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் தன்னலம் பார்க்காமல் ஈடுபட்டு இருக்கும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என அந்த வீடியோவில் அனில் கும்ப்ளே குறிப்பிட்டுள்ளார்.