கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து பட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியன்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இருவேடங்களில் நடித்த திரைப்படம் இந்தியன். 1996-ம் ஆண்டு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இதனையடுத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தொடரும் சிக்கல்
ஆனால், இந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பல தடங்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. கமல்ஹாசனின் வயதான தோற்றம் பொருத்தமாக இல்லை எனக்கூறி படப்பிடிப்பை சில வாரங்கள் நிறுத்தினர். பின்னர் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தபோது கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின் படப்பிடிப்பு தொடங்கிய போது, கிரேன் விழுந்து படக்குழுவினர் 3 பேர் பலியான கோர விபத்து நடந்தது. இதனால் படப்பிடிப்பு தடைபட்டது. தற்போது ஊரடங்கினால் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வதந்தி, நம்பவேண்டாம்
இந்த நிலையில், இந்தியன்-2 படத்தை கைவிட பட நிறுவனம் முடிவு செய்துள்ளதாக இணையதளங்களில் தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை பட நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள லைகா நிறுவனம், இந்தியன் 2 படம் குறித்து பரவும் செய்தி உண்மையல்ல. அது வெறும் வதந்தி. தற்போது 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஊரடங்கு முடிந்த பின் எஞ்சியுள்ள காட்சிகள் படமாக்கப்படும் என தெரிவித்துள்ளது.