கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் தவிக்கும் சூழலில் டாஸ்மாக் கடைகளை திறந்து, கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா என தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
டாஸ்மாக்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் மே 7-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட பகுதிகளில் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.
கடும் கண்டனம்
சமூக இடைவெளியை பின்பற்றி மது வாங்க வேண்டும் என அரசு அறிவித்தாலும், கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் டாஸ்மாக் கடையை திறப்பது கண்டிக்கத்தக்கது என அரசியல் கட்சியினரும், திரைத்துறையினரும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கமல் கேள்வி
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? என கமல் குறிப்பிட்டுள்ளார்.