ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
காற்றில் கலந்த விஷவாயு
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நாயுடுதோட்டா அருகே உள்ளது ஆர்.ஆர். வெங்கடபுரம் எனும் கிராமம். இங்கு எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த ஆலையில் இருந்து ரசாயன வாயு கசிந்து வெளியேறி உள்ளது. அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே பல மீட்டர் தொலைவுக்கு பரவியது. காற்றில் கலந்த இந்த விஷவாயுவினால் பொதுமக்கள் மூச்சுவிட முடியாமல் தவித்தனர்.
8 பேர் பலி
சாலையில் நடந்து சென்றவர்கள், வீடுகளில் இருந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன், ஒரு சிலர் மயங்கி விழுந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், வாயுவால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், ஒரு குழந்தை உட்பட 3 பேர் சிறிது நேரத்திலேயே மரணம் அடைந்தனர். அதன்பின்னர் 5 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
மக்கள் வெளியேற்றம்
வாயுக்கசிவு காற்றில் வேகமாக பரவியதையடுத்து, ஆலையை சுற்றி 3 கி.மீ சுற்றளவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஈரமான முகக்கவசங்களை அணிந்து தற்காத்துக் கொள்ளும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பலி அதிகரிக்குமா?
வாயுக்கசிவுக்கு காரணமான ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கம்படி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கெனவே கொரோனாவால் பெரும் பாதிப்புகளை சந்தித்துவரும் நிலையில், இந்த வாயுக்கசிவு மேலும் பல உயிர்களை காவு வாங்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.