டாக்டர் உள்பட பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த கன்னியாகுமரி வாலிபர் காசி குறித்து ஏற்கனவே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக பின்னணி பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். 
ஆபாச படம், மிரட்டல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி என்கிற சுஜி. 26 வயதாகும் இவர், சென்னையில் உள்ள கல்லூரியில் பிஏ படித்துள்ளார். பின்னர் ஊருக்கு சென்ற பின், தந்தையின் கோழிக்கடையை கவனித்து வந்தார். எப்போதும் சமூக வலைதளத்திலேயே மூழ்கிக் கிடக்கும் காசி, சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டரின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். 
திடுக்கிடும் தகவல்கள்
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், டாக்டரை போல் பல இளம்பெண்களை மிரட்டி பணம் பறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. முதலில் சமூக வலைதளத்தில் ஏற்பட்ட நட்பு மூலம் பெண்களை மயக்கி தன்னுடைய வலையில் வீழ்த்துவது, பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவர்களுடன் நெருக்கமாக இருப்பது, அந்த ஆபாச காட்சியை புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டு சமூக வலைதளத்தில் வெளியிடப் போவதாக மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட லீலைகளில் காசி ஈடுபட்டுள்ளார். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் உள்ள வசதியான குடும்பத்தை சேர்ந்த பல பெண்களிடம் அவர் காம லீலையில் ஈடுபட்டது தெரியவந்தது. 
ஏற்கனவே வார்னிங்
இந்த நிலையில், இந்த இளைஞர் குறித்து பிரபல பாடகி சின்மயி தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பல பெண்கள் இந்த காமுகன் பற்றி தன்னிடம் இதற்கு முன்பாகவே கூறியிருந்ததாகவும், நான் இவனை பற்றி ஏற்கனவே எனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதகவும் தற்போது இவன் சிறையில் உள்ளான் என்று பதிவிடப்பட்டுள்ளார்.















































