மக்கள் அனைவரும் பயமின்றி எப்போது குடும்பத்துடன் திரையரங்குக்கு வருகிறார்களோ அப்போது தான் மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரிலீசாகும் என அப்படத்தின் இயக்குனரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
அம்மனாக நயன்தாரா
ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் ஊர்வசி, மவுலி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முதன்முறையாக அம்மனாக நடிப்பதால், படப்பிடிப்பு நடந்த நாட்களில் நயன்தாரா விரதம் இருந்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு நடந்தது.
வழிபாடு
மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்த போது நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கோவில், கோவிலாக சென்றார். கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
ஊரடங்கால் தள்ளிப்போனது
‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை மே 1-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ரிலீஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
ரிலீஸ்?
கொரோனா அச்சுறுத்தல் தணிந்து உலகம் எப்போது பாதுகாப்பானதாக மாறுகிறதோ, மக்கள் அனைவரும் பயமின்றி எப்போது குடும்பத்தோடு திரையரங்குக்கு வருகிறார்களோ அப்போது தான் மூக்குத்தி அம்மன் ரிலீசாகும். இதை நானும் தயாரிப்பாளரும் பேசி முடிவு பண்ணிட்டோம்” என கூறினார்.