கொரோனா ஊரடங்கு காலத்தில் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவது தவறல்ல என்று நடிகை வித்யா பாலன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர்.
தியேட்டர்கள் மூடல்
ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிக்கப்பட்டு ரிலீசுக்கு தயாராக உள்ள பல படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் திணறி வருகின்றனர். மூடப்பட்டுள்ள தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், தயாராக உள்ள பல படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட முயன்று வருகின்றனர்.
ஓடிடியில் ரிலீஸ்
தமிழில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ ஆகிய படங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வேறு வழியில்லை
ஓடிடி தளத்தில் திரைப்படங்கள் வெளியிடுவது தொடர்பாக நடிகை வித்யா பாலன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இப்போதுள்ள நிலைமையில் சினிமா படங்களை தியேட்டர்களில் வெளியிட வாய்ப்பே இல்லை. வேறு வழி இல்லாமல்தான் இணையதளத்தில் வெளியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலைமையை தியேட்டர் உரிமையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தியேட்டர்கள் திறந்ததும் எப்போதும் போலவே நிலைமை மாறி விடும்.
தற்காலிகம் தான்
தியேட்டர்களில் படங்கள் பார்ப்பதைத்தான் எல்லோரும் விரும்பவும் செய்வார்கள். ஆனால் வேறு வழி இல்லாமல் தற்போது நிலவும் விசித்திரமான சூழ்நிலையில் ஓடிடி மாதிரி ஒரு சாதனம் படங்கள் ரிலீசுக்கு பயன்பட்டு இருப்பது ஒரு நல்ல விஷயம். ஓடிடியில் சினிமா படங்கள் வெளியாவது தற்காலிகமானதுதான். அதை தியேட்டர் உரிமையாளர்கள் உணர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.