சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தன்னை யாரும் அணுகவில்லை என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
‘பொன்மகள் வந்தாள்’
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானதையடுத்து அப்படம் வருகிற 29ந் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸாகிறது. இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஜோதிகா பேசுகையில்; கொரோனா ஊரடங்கு முடிந்த பின் தியேட்டர்கள் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம். அதுவரை படத்தை நேரடியாக ரசிகர்களிடம் கொண்டு செல்வது பலனளிக்கும் என நாங்கள் நம்பினோம்.
வக்கீலாக நடிப்பது கடினம்
இதற்கு முன்பு நான் போலீசாக நடித்திருந்தாலும், வக்கீலாக நடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. நீதிமன்ற காட்சிகளில் 30 பக்க வசனங்கள் வரை பேச வேண்டியிருந்தது. சிலர் உதவியுடன் ஒரே டேக்கில் பல காட்சிகளில் பேசி முடித்தேன். ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்திலும் ஒரு சமூக கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
சினிமாவை கற்றேன்
பாக்யராஜ், பாண்டியராஜன், தியாகராஜன், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் போன்ற தமிழ் இயக்குனர்களுடன் இணைந்து நடித்தது, சினிமாவைப் பற்றி மேலும் கற்றுக்கொள்ள உதவியது. கதையம்சம் உள்ள படங்களையே தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகிறேன்.
யாரும் அணுகவில்லை
சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. அந்தக் கேரக்டரில் யார் நடித்தாலும் அவர்களுக்கு வாழ்த்துக்கள். கொரோனாவும், அதனால் வந்த ஊரடங்கும் நமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. அதைப் புரிந்து கொண்டு வருங்காலத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஜோதிகா கூறியுள்ளார்.