மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
கலைஞர் நூற்றாண்டு நூலகம்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது நினைவாக மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் தமிழக அரசால் அமைக்கப்பட்டது. கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்தநாளான இன்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் நூலக வளாகத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்காள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரம்மாண்டம்
கலைஞர் நூற்றாண்டு நூலகம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு நூலகம் உருவாக்க மொத்தம் ரூ.215 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. இதில் ரூ.60 கோடிக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. ரூ.18 கோடிக்கு தளவாடப் பொருட்கள், புத்தகங்களை அடுக்கி வைக்கத் தேவையான ரேக்குகள் மற்றும் கட்டுமானத்துக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டது.















































