தனக்கு பதிலாக வேறொருவர் டப்பிங் பேசியது வருத்தமாக இருந்ததாக நடிகை சித்தி இத்னானி தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் நடிகை
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சித்தி இத்னானி, சிம்பு ஜோடியாக ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பின் ஆர்யாவுக்கு ஜோடியாக ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தில் அவர் நடித்தார். மராத்தி பெண்ணாக இருந்தாலும், தமிழில் சரளமாகப் பேசும் திறமை பெற்றுள்ள சித்தி இத்னானி, வெந்து தணிந்தது காடு படத்தில் தனது கேரக்டருக்கு டப்பிங் பேசியிருந்தார். ஆனால், காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் அவர் டப்பிங் பேசவில்லை.
வருத்தம்
இதுகுறித்து நடிகை சித்தி இத்னானி கூறுகையில்; “நான் மும்பையில் பிறந்து வளர்ந்த மராத்தி பெண். வெந்து தணிந்தது காடு படத்தில் நடிக்க ஒப்பந்தமானதில் இருந்து தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். படப்பிடிப்புத்தளத்தில் இருப்பவர்கள், உதவியாளர்கள், மேக்கப்மேன், காஸ்ட்யூம் டிசைனர் ஆகியோருடன் நான் தமிழில் பேசிப் பழகினேன். எனது ஆர்வத்தைப் புரிந்துகொண்ட இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், வெந்து தணிந்தது காடு படத்துக்கு என்னையே டப்பிங் பேச வைத்தார். ஆனால், காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் ராமநாதபுரம் பகுதி பெண்ணாக நடித்ததால், அந்த ஸ்லாங் எனக்கு சரியாகப் பேச வரவில்லை. எனவே, எனக்குப் பதிலாக இன்னொருவர் பேசினார். இது எனக்கு வருத்தமாக இருந்தாலும், நான் பேசியிருந்தால் கண்டிப்பாக அந்த கேரக்டருக்குப் பொருந்தியிருக்காது என்பதை உணர்கிறேன். தமிழில் தொடர்ந்து சரளமாகப் பேச பயிற்சி பெற்று வருகிறேன்” என்றார்.