திமுக காரர்களை சீண்டிப் பார்க்க வேன்டாம் என்றும் தங்களுக்கும் எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது; “அமைச்சர் செந்தில் பாலாஜி கைது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் யாருக்கும் கொஞ்சமும் சந்தேகமில்லை. அமலாக்கத்துறை மூலம் அரசியல் செய்ய பாஜக தலைமை நினைக்கிறது. பாஜகவின் எதிர்க்கட்சிகளின் இடங்களில் மட்டும் 3000 ரெய்டுகள். அதிமுக ஆட்சியில் நடந்த ரெய்டுகள் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்களா?.
மிரட்டி பணிய வைக்க முடியாது
எதேச்சாதிகார நடவடிக்கைகளை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நாங்கள், எங்களுக்கு என்று தனித்த அரசியல் கொள்கை, கோட்பாடுகள் இருக்கின்றன. பாஜக நினைப்பது மாதிரியான கட்சி அல்ல திமுக. மிரட்டிப் பணிய வைக்க நினைத்தால், குனிய மாட்டோம். நிமிர்ந்து நிற்போம். திமுக நடத்திய போராட்டங்கள் எப்படிப்பட்டது என்று வரலாற்றைப் புரட்டி பாருங்கள்.
எச்சரிக்கை
மத்திய அரசாங்கத்தை ஆள்கிற பொறுப்பில் இருக்கும் பாஜக அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். திமுகவை பற்றி தெரியவில்லை என்றால் டெல்லியில் இருக்கும் மூத்த தலைவர்களைக் கேட்டுப் பாருங்கள். நாங்கள் ஆட்சிக்காக மட்டும் கட்சி நடத்துபவர்கள் இல்லை, கொள்கைக்காக கட்சி நடத்துகிறவர்கள். திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம், தாங்க மாட்டீர்கள்; எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்; இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை”. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.