மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடல் சென்னை கிண்டியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
செயலிழந்த உறுப்புக்கள்
நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சரத்பாபுவிற்கு இந்த மாத ஆரம்பத்தில் இருந்து உடல்நிலை மோசம் அடைந்தது. எனினும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது உடல் உறுப்புக்கள் அடுத்தடுத்து செயலிழந்ததை தொடர்ந்து நேற்று மதியம் 1:30 மணி அளவில் அவர் காலமானார்.
திரைப்பிரபலங்கள் அஞ்சலி
நடிகர் சரத்பாபு இறப்புச் செய்தி சினிமா பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சரத்பாபு இறந்த செய்தியை கேட்ட தெலுங்கு திரையுலகத்தில் உள்ள அவரது நண்பர்களும், இயக்குநர்களும் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர். அதன்பிறகு மாலை 6 மணி அளவில் அவரது உடல் ஹைதராபாத் ஃபிலிம் சாம்பருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தெலுங்கு திரை உலகை சேர்ந்த பலர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
உடல் தகனம்
அதன்பிறகு சரத்பாபுவின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று காலை நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, பார்த்திபன், பாக்யராஜ், சுகாசினி, சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான திரைப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சரத்பாபுவின் உடல் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.