அசாமில் ‘பெண் சிங்கம்’ என்று அழைக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி கார் விபத்தில் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘பெண் சிங்கம்’
அசாம் மாநிலத்தின் நகோன் மாவட்டம் மொரிகொலாங் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஜுமொனி ரூபா. 30 வயதான இவர் மோசடி வழக்கில் தனது வருங்கால கணவரையே கைது செய்தார். மேலும், குற்றவாளிகள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுத்து ‘பெண் சிங்கம்’ என பெயர் பெற்றார். அதேவேளை, இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் இருந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.
விபத்தா? – கொலையா?
இந்நிலையில், உதவி ஆய்வாளர் ஜுமொனி ரூபா நேற்று அதிகாலை சாலை விபத்தில் உயிரிழந்தார். ரூபா நேற்று அதிகாலை 2.30 மணியளவில் தனது காரில் சஹ்குயா என்ற கிராமப்பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்த போது, எதிரே வேகமாக வந்த லாரி மோதியது. இந்த கோர விபத்தில் ரூபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திட்டமிட்ட படுகொலையா? அல்லது விபத்தா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜுமொனி ரூபாவின் இந்த மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.