ஏ.ஆர். ரகுமான் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை கூறியுள்ளார் சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரி.
பாதியில் நிறுத்தம்
கடந்த 30ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராஜ் பகதூர் மில்ஸ் பகுதி அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். மாலையில் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரகுமானின் பல பாடல்கள் இசைக்கப்பட்டன. இரவு 10 மணி நெருங்கியதும் ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான “தில் சே” படத்தில் “சய்யா சய்யா” பாடலை பாடத் தொடங்கிய போது, போலீஸ் அதிகாரி ஒருவர் மேடையின் மீது ஏறி தனது வாட்சை காண்பித்து சைகை செய்தார். ஆனால் தொடர்ந்து பலரும் இசையமைத்துக் கொண்டே இருந்ததால், அவர்களுக்கு அருகில் சென்று உடனடியாக இசைப்பதை நிறுத்துமாறு கூறினார். அங்கிருந்த ரசிகர்கள் இதனை பார்த்தவுடன் கூச்சலிட தொடங்கினர். மேடையில் பாடிக்கொண்டிருந்த ஏ.ஆர். ரகுமான் உடனடியாக மேடையில் இருந்து இறங்கினார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
விளக்கம் கொடுத்த அதிகாரி
முன்னணி இசையமைப்பாளர் பாடிக்கொண்டிருக்கும் போது இப்படி செய்வது சரியா? என்று ரசிகர்கள் பலர் கேள்வி கேட்டதுடன், சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு கண்டனமும் தெரிவித்து வந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி பெரும் சர்ச்சையாக மாறியது. இதனிடையே, அங்கு நடந்த அந்த சம்பவத்திற்கு போலீஸ் அதிகாரி தனது பக்க விளக்கத்தை கொடுத்துள்ளார். சந்தோஷ் பட்டெல் என்ற அந்த போலீஸ் அதிகாரி கூறுகையில், “ஒரு காவல் அதிகாரியாக நான் என்னுடைய கடமையைத்தான் செய்தேன். இரவு 10 மணிக்கு மேல் பொதுவெளியில் இசையை சத்தமாக ஒலிக்க விடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நான் முதலில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அணுகினேன். அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்பதாலேயே மேடையில் ஏறி ஏ.ஆர். ரகுமான் மற்றும் இசைக் கலைஞர்களிடம் நிறுத்துமாறு கூறினேன். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் கடந்துவிட்டதால் தான் நான் அவ்வாறு நடந்து கொண்டேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.