சமீபத்தில் என் டி ஆரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு ரஜினிகாந்த் பேசியதற்கு பல அரசியல் தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் நடிகர் ஜெகபதி பாபு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
வம்பில் சிக்கிய ரஜினி
என் டி ஆர் நூற்றாண்டு விழா விஜயவாடாவில் சமீபத்தில் நடந்தது. அந்த விழாவில் அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், ஒன்றுபட்ட ஆந்திராவில் முன்னாள் முதல்வரும் என்டிஆரின் மருமகனுமான சந்திரபாபு நாயுடுவை பற்றி பேசும்போது, “1996களிலேயே ஹைதராபாத் நகரை ஐடி துறை நகரமாக சந்திரபாபு நாயுடு மாற்றியதைப் பற்றியும், விஷன் 2047 மூலம் ஆந்திராவை முன்னேற்றுவார் என்றும் பாராட்டி பேசினார். இதனால் செம கோபமடைந்த ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ஆந்திராவின் அமைச்சருமான நடிகை ரோஜா உட்பட பலரும் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
கடும் விமர்சனம்
சமூக வலைதளங்களிலும் ரஜினிகாந்த பேசியதற்கு பல எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வெளிவந்தது. இந்நிலையில் சமீபத்தில் “ராமபானம்” என்ற தெலுங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தெலுங்கு நடிகரான ஜெகபதி பாபுவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “எப்பொழுது பேசினாலும் ரஜினிகாந்த் சிறப்பாக பேசுவார். அதைவிட முக்கியம் அவர் எப்பொழுதும் உண்மையையே பேசுவார். ரஜினி பேசியது நூற்றுக்கு நூறு சரி” என்று பதில் அளித்தார். தெலுங்கு திரை பிரபலங்களே ரஜினிகாந்துக்கு ஆதரவாக பேச யோசித்து வந்த நிலையில், ஜெகபதிபாபு ரஜினிக்கு சப்போர்ட் செய்து பேசியுள்ளது அவர் ரசிகர்களுக்கு சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது. அதேசமயம் ஒய் எஸ் ஆர் கட்சியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் ஜெகபதி பாபுவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.