கேரளாவில் 56 சதவீத கொரோனா நோயாளிகள் குணமடைந்துவிட்டதாகவும், விரைவில் 100 சதவீத நோயாளிகளைக் குணப்படுத்துவோம் என்றும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
குறையும் கொரோனா
கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் குணமடைந்து வருகின்றனர். புதிதாகக் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய மாநிலம் கேரளம்தான் என, முதல்வர் பினராயி விஜயன் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
167 பேருக்கு சிகிச்சை
இதுதொடர்பாக பேசிய அவர், கேரள மாநிலம் முழுவதும் 387 பேருக்குக் கொரோனா ஏற்பட்டதாக தெரிவித்தார். அதில், தற்போது 167 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 218 பேருக்கு கொரோனா பூரணமாகக் குணமாகியுள்ளதாக கூறினார்.
நல்ல பலன் தருகிறது
ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளைப் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து வருவதாக தெரிவித்த முதலமைச்சர் பினராயி விஜயன், கண்காணிப்பில் இருப்பவர்களுக்கு ஆயுர்வேத மருந்துகளையே வழங்கி வருவதாகவும், அது நல்ல பலனை அளித்து வருவதாகவும் கூறினார். இதனால், 56 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனர். விரைவில் 100 சதவீத நோயாளிகளைக் குணப்படுத்துவோம் என்றும் பினராயி விஜயன் நம்பிக்கை தெரிவித்தார்.
9-வது இடத்தில் கேரளா
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கேரளா, தற்போது, 9ம் இடத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.