மனைவி, மகனை கைவிட்டுவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விரிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
வர்த்தக சாம்ராஜ்ஜியம்
இந்திய ஸ்டார்ட் அப் சந்தையில் ஸ்டார் நிறுவனமாக இருக்கும் Zoho-வின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. அமெரிக்காவில் 25 வருடம் பணியாற்றிவிட்டு சென்னையில் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் கலாச்சார வெற்றிக்கு வித்திட்டவர். பெரு நிறுவனங்கள், மெட்ரோ நகரங்களை விடுத்து கிராமங்களில் அலுவலகத்தை அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என ஸ்ரீதர் வேம்பு கூறியது மூலம், இளைஞர்கள் மத்தியில் அவர் பெரும் மதிப்பை பெற்றார். இதற்கு முன்னுதாரணமாக தற்போது சென்னை தலைமை அலுவலகத்தை விடுத்து தான் இளம் காலத்தில் வளர்ந்த தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார்.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
இந்த நிலையில் ஸ்ரீதர் வேம்பு மீது அவருடைய மனைவி பிரமிளா சீனிவாசன் விவாகரத்து வழக்கின் விசாரணையில் முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஸ்ரீதர் வேம்பு மீது அவர் மனைவி அளித்த புகார் விவரங்களை அமெரிக்காவின் வணிக இதழான போபர்ஸ் செய்தியாக்கியுள்ளது. அதில், “நானும் எனது கணவர் ஸ்ரீதர் வேம்பும் 29 வருடங்கள் ஒன்றாக இருந்தோம். 2020ம் ஆண்டு தமிழ்நாடு திரும்பிய பிறகு, அவர் என்னையும், மகனையும் கைவிட்டுவிட்டார். என் மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பும், உடல் ரீதியாக சில பாதிப்புகளும் உள்ளன. ஆனால், எங்களை அவர் கவனிக்கவில்லை. சோஹோ நிறுவனத்தில் அவருக்கு இருந்த பங்குகள் மற்றும் சொத்துக்களை எனக்கு தெரியாமலேயே அவரது குடும்பத்தினருக்கு மாற்றிவிட்டார்” என்ற குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.
விரிவான விளக்கம்
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு விரிவான விளக்கம் அளித்துள்ளார் ஸ்ரீதர் வேம்பு. இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “எனது வணிக வாழ்க்கையை விட தனிப்பட்ட வாழ்க்கை சோகம் நிறைந்தது. எனது மகனுக்கு ஏற்பட்ட ஆட்டிசம் பாதிப்பு எங்கள் வாழ்க்கையை சிதைத்தது. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனச் சோர்வடையச் செய்தது. நானும் எனது மனைவியும் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டிசத்திற்கு எதிராக போராடி வருகிறோம். பிரமிளா ஒரு சூப்பர் மதர். எங்களது மகனின் ஆட்டிசம் பாதிப்பை குணப்படுத்த வேண்டும் என்பதே அவரின் முக்கிய நோக்கம். துரதிர்ஷ்டவசமாக தங்கள் திருமண வாழ்க்கையின் முடிவு ஒரு புதிய மோதலைக் கொண்டு வந்தது. Zoho நிறுவனத்தில் என்னுடைய உரிமை குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார். நிறுவனத்தில் உள்ள எனது பங்குகளை நான் வேறு யாருக்கும் மாற்றியதில்லை. நான் பிரமிளாவையும், எனது மகனையும் பொருளாதார ரீதியாக கைவிட்டுவிட்டேன் என்று சொல்வது கற்பனை. அவர்கள் என்னை விட பணக்கார வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். நான் அவர்களுக்கு முழு ஆதரவை தருகிறேன். எப்போதும் பிரமிளாவையும் என் மகனையும் ஆதரித்து வருகிறேன், நான் வாழும் வரை அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளாள்ளார்.