இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி நடிகர் விஜய்சேதுபதி மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு விஜய்சேதுபதியின் பதில் என்ன என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சர்ச்சை பேச்சு

தமிழில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஜய்சேதுபதி, கடந்த ஆண்டு நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, கோவில்களில் கடவுள்களுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இந்து அமைப்புகள் கண்டனம்

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, விஜய்சேதுபதியின் பேச்சுக்கு இந்து அமைப்புகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. மேலும், இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் விஜய்சேதிபதி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அகில இந்திய இந்து மகா சபா சார்பில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார்

அதனைதொடர்ந்து தற்போது திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காவல் நிலையத்தில் விஜய்சேதுபதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆரணியை சேர்ந்த பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ஜெய கோபி தலைமையில் பா.ஜ.க.வினர் விஜய் சேதுபதி மீது புகார் அளித்துள்ளனர்.

நடவடிக்கை வேண்டும்

அந்த புகார் மனுவில், இந்துக் கோவில்களில் நடக்கும் இந்து ஆகம விதிகளை கொச்சைப்படுத்தி நடிகர் விஜய்சேதுபதி காழ்ப்புணர்ச்சியுடன் பேசி உள்ளார். இதற்கு முன்பு சபரிமலை விவகாரத்தில் பெண்களை அனுமதித்தல் சம்பந்தமாக இந்து மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். அவர் பேசியதால் நான் மிகுந்த மன உளைச்சலும், மன வேதனையும் அடைந்தேன். பெரும்பான்மை மக்களின் வழிபாட்டில் ஆகம விதிகள் குறித்து பேசிய விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

குவியும் புகார்கள்

இதேபோல் வேலூர் வடக்கு காவல் நிலையம், சத்துவாச்சாரி, ராணிப்பேட்டை, வாலாஜா காவல் நிலையங்களிலும் நடிகர் விஜய்சேதுபதி மீது இந்து அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். தன்மீதான புகார்களுக்கு விஜய்சேதுபதி என்ன பதிலளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here