டப்பிங் ஆர்டிஸ்டாக மட்டுமில்லாமல், நடிகையாகவும் வெற்றி பெற்ற நடிகை ரவீனா ரவி தற்போது கிராமத்து கதையில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மயக்கும் குரல்
2012 ஆம் ஆண்டு வெளியான சாட்டை படத்தின் மூலம் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பிரபலமானவர் ரவீனா ரவி. பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்து மிகவும் பிரபலமானவர். சிறந்த டப்பிங் கலைஞருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். அமலாபால், திரிஷா, சமந்தா, எமி ஜாக்சன், காஜல் அகர்வால், நிக்கி கல்ராணி, நிதி அகர்வால், ராஷி கண்ணா போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். பல மலையாள படங்களுக்கும் டப்பிங் கொடுத்துள்ள ரவீனா. 2017 ஆம் ஆண்டு வெளியான “ஒரு கிடாயின் கருணை மனு” என்ற படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார். ராக்கி, வீரமே வாகை சூடும் போன்ற படங்களிலும் நடித்தார். சமீபத்தில் வெளியான லவ் டுடே படத்திலும் இவர் நடிப்பு பிரபலமாக பேசப்பட்டது. லவ் டுடே படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த படம் சமீபத்தில் வெற்றிகரமாக நூறாவது நாளை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமத்து கதை
தற்போது மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டும் இல்லாமல் “வட்டார வழக்கு” என்ற கிராமத்து கதையில் நடிக்கிறார் ரவீனா. இப்படத்தை கண்ணுசாமி ராமச்சந்திரன் தயாரித்து இயக்குகிறார். இதுகுறித்து இயக்குநர் கூறுகையில், ” இந்த படம் 1962 மற்றும் 1985 கால கட்டங்களில் நடக்கும் கதையாகும். சொத்து பிரச்சனை காரணமாக பங்காளிகள் மோதிக்கொள்வதும், பின்பு கூடிக் கொள்வதுமான கதை. அன்றைய கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் வகையில் படமாக்கிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார். டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக மட்டுமில்லாமல் நடிகையாகவும் தன்னை நிரூபித்து வந்த ரவீனாவின் இந்த படமும் சூப்பர் ஹிட் ஆகும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.