சேப்பாக்கம் – திருவல்லிகேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமைச்சராக பொறுப்பேற்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இன்று (டிச.,14) பதவியேற்றுக்கொண்டார். புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு தலைநகரம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல் தமிழ்நாடு விளையாட்டு தலைநகரமாக மாற்றப்படும் என்றார். ஒவ்வொரு தொகுதிக்கும் மினி மைதானம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் கூறினார். மாரிசெல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ திரைப்படமே தனது கடைசி படம் என்றும் இனி நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்த அவர், அமைச்சராக பொறுப்பேற்றதால் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க முடியாத சூழல் உள்ளது என்றார்.
மனமார்ந்த வாழ்த்துகள்
அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த், நடிகரும் – மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளதாவது; தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
பொறுப்பென்று ஏற்பீர்
கமல்ஹாசன் தெரிவித்துள்ள வாழ்த்துப் பதிவில், “வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.