பொள்ளாச்சி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதியில் சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
வனப்பகுதி
கோவை மாவட்டம் ஆனமலை புலிகள் காப்பக்த்திற்கு உட்பட்ட பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதியை ஒட்டிய ஆழியார், பட்டர்பிளை பார்க், நவமலை, கவி அருவி, சின்னார்பதி போன்ற பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
மிரட்டும் ஒற்றை யானை
இந்தப் பகுதியில், சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்த ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம் இருந்தது. அப்போது வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையை அடர் வனப்பகுதிக்கு விரட்டினர். இந்நிலையில், காட்டூர் கால்வாய் வழியாக பட்டர்பிளை பார்க் அருகில் முகாமிட்டு இருந்த அந்த காட்டு யானை, நேற்று மாலை வனப்பகுதியை விட்டு வெளியேறி மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடியது. இதனை அறிந்த வனத்துறையினர், யானை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.