குரூப் கேப்டன் வருண் சிங் மறைவால் தான் மிகவும் வேதனை அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வீரர்கள் மரணம்

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு 14 பேருடன் சென்ற ராணுவ ஹொலிகாப்டர் கடந்த 8-ம் தேதி குன்னூர் அடுத்த காட்டேரி மலைப்பாதையில் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேபடன் வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 80 சதவிகித தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்த அவர், மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள கமாண்ட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். வருண் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்த நிலையில், மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. தீக்காயங்கள், தொற்று போன்றவற்றில் இருந்து விரைவாக குணம்பெற வேண்டி ஹைபர்பேரிக் ஆக்சிஜன் தெரபியும் கேப்டன் வருண் சிங்கிற்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக விமானப்படை அறிவித்துள்ளது.

மிகவும் வேதனை

குரூப் கேப்டன் வருண் சிங் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; “குரூப் கேப்டன் வருண் சிங் பெருமையுடனும், வீரத்துடனும், மிகுந்த தொழில்முறையுடனும் தேசத்திற்கு சேவை செய்தார். அவரது மறைவால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். தேசத்திற்கு அவர் ஆற்றிய செழுமையான சேவை என்றும் மறக்க முடியாதது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; “இந்திய விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங்கின் மறைவை அறிந்து, வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு வேதனை அடைந்தேன். இறுதி மூச்சு வரை போராடிய உண்மையான போராளி. எனது எண்ணங்களும் ஆழ்ந்த இரங்கலும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. இந்த துயர நேரத்தில் நாங்கள் குடும்பத்துடன் உறுதியாக நிற்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நம் மனதில் வாழ்வார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த குரூப் கேப்டன் வருண் சிங் இப்போது இல்லை என்ற சோகமான செய்தி கேட்டு ஆழந்த கவலை அடைந்தேன். அவரது வீரமும், அர்ப்பணிப்பும் அனைவருக்கும் உத்வேகமாக அமையும். மேலும் அவர் என்றும் நம் மனதில் வாழ்வார். இவ்வாறு மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here