2021-ம் ஆண்டுக்கான “மிஸ் யூனிவர்ஸ்” பட்டத்தை இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் சாந்து வென்றார்.
இந்திய அழகி சாதனை
70-வது “மிஸ் யூனிவர்ஸ்” போட்டி இஸ்ரேல் நாட்டின் ஈலாட் நகரில் நடைபெற்றது. இதில் 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். பராகுவே மற்றும் தென்னாப்பிரிக்க அழகிகளை வீழ்த்தி பிரபஞ்ச அழகியாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் கவுர் சாந்து வெற்றி பெற்று வாகை சூடினார். அவருக்கு முன்னாள் பிரபஞ்ச அழகியான மெக்சிகோவின் ஆண்டிரியா மீஸா கிரீடம் அணிவித்தார். 2000-ம் ஆண்டு லாரா தத்தா தேர்வுக்குப் பின்னர், 21 ஆண்டுகள் கழித்து தற்போது இந்திய பெண் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதயம் உடைகிறது
பட்டத்தை வென்ற மகிழ்ச்சியுடன் மேடையில் பேசிய ஹர்னாஸ் கவுர் சாந்து, உங்களுக்காக நீங்களே பேசுங்கள். உங்கள் வாழ்க்கையை வழி நடத்துபவர் நீங்கள்தான். உங்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது நீங்கள்தான். நான் என்னை நம்புகிறேன், அதனால்தான் இங்கே நிற்கிறேன். இயற்கை எப்படி அழிக்கப்படுகிறது என்பதை பார்க்கும் போது என் இதயம் உடைகிறது. அதற்கு காரணம் நமது பொறுப்பற்ற செயல்பாடுகள் தான். பேச்சை குறைத்து செயலில் தீவிரத்தை கூட்ட வேண்டிய நேரம் இது. காரணம் நமது ஒவ்வொரு நடவடிக்கையும் இயற்கையை அழிக்கலாம் அல்லது காக்கலாம் என்றார். இவ்வாறு அவர் கூறினார்.