தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

ஸ்டெர்லைட் வழக்கு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே அந்த ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018ம் ஆண்டு மே 22ந் தேதி பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம், வன்முறையாக மாறியது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்தும் ஆலையை திறக்க அனுமதி கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்றும், ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பொதுமக்களுக்கு நோய்கள் வருவதால், அந்த ஆலையை திறக்கக்கூடாது என்றும் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தெர்மல் சொ.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜூனன், தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதிரடி தீர்ப்பு

இந்த வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆகியோர், தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை தவிர வேறு வழி இல்லை என வாதிட்டனர். மக்களுக்கு சுத்தமான காற்று, குடிநீர் வழங்குவது அரசின் கடமை என்ற அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர் தூத்துக்குடி சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர். தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத்தின் விதிகளை தொடர்ந்து பின்பற்ற மறுத்ததன் காரணமாகவே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகாவும் அவர்கள் குறிப்பிட்டனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டால் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு செயல்படுவோம் என்றும் கூடுதல் கட்டுப்பாடு விதித்தாலும் அதை பின்பற்ற தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக அரசு தரப்பு, ஆலை நிர்வாகம் தரப்பு, இடையீட்டு மனுதாரர்கள் தரப்பு என 39 நாட்கள் நடந்த அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஜனவரி 8ம் தேதி நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காணொலி காட்சி மூலம் பிறப்பித்தனர். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறிய நீதிபதிகள், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

மக்கள் கொண்டாட்டம்

ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பான சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று, தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க சுமார் 1,500 போலீசார்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here