ஜல்லிக்கட்டு போட்டிகளில் பல பரிசுகளை வென்று சாதனை படைத்த தனது “கருப்பன்” காளையுடன் நடிகர் சூரி மதுரையில் உள்ள சொந்த கிராமத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
காளையுடன் சூரி
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஜூலை 31ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் சிறிது நாள் சென்னையிலிருந்த நடிகர் சூரி, பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சென்னையில் இருந்த போது தனது குழந்தைகளுடன் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு பலரது பாராட்டைப் பெற்றார் சூரி. தற்போது ராஜாக்கூரில் வளர்க்கப்படும் “கருப்பன்” என்ற காளையுடன் இருக்கும் படங்களை நடிகர் சூரி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். “ஊரடங்குக்கு நடுவுல, ஊரே அடங்கி நிக்கும் எங்க “கருப்பன்” நடந்து போனா!” என்ற வாசகத்தையும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரிசுகளை வென்று சாதனை
“கருப்பன்” காளை இதுவரை 40க்கும் மேற்ப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடுபிடி வீரர்கள் எவரும் கருப்பன் காளையை பிடித்ததில்லை. ஏன் தொட்டதுகூட இல்லை. பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பல பரிசுகளை வென்றுள்ளது “கருப்பன்”. இதுகுறித்து நடிகர் சூரி கூறுகையில்; கருப்பன் வென்ற பரிசுகளை எங்கள் காளையை பராமரிப்பவர்களுக்கும், ஊர்மக்கள் வீட்டில் எதேனும் காதுகுத்து அல்லது திருமண விழா போன்ற விசேஷங்கள் நடந்தால் அவர்களுக்கும் கருப்பன் காளை சார்பாக அளித்து விடுவோம் எனத் தெரிவித்துள்ளார். தற்போது எங்கள் கருப்பன் காளையை எனது தம்பி வினோத் பரமாரித்து வருவதாகவும் சூரி கூறியுள்ளார்.