வனிதா – பீட்டர் பால் திருமணம் தொடர்பான வழக்கை முறையாக விசாரிக்கக் கோரி பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் காவல்துறை உயரதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். 
சர்ச்சை திருமணம்
பிக்பாஸ் புகழ் நடிகை வனிதா விஜயகுமார் அண்மையில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தனக்கு முறையான விவாகரத்து அளிக்காமல் நடிகை வனிதாவை பீட்டர் பால் திருமணம் செய்ததாக வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன்பேரில் காவல் ஆய்வாளர் பீட்டரிடம் விசாரணை நடத்திய போது, தனது முதல் மனைவியை முறையாக விவாகரத்து செய்தபின் தான், வனிதாவை திருமணம் செய்வேன் என எழுத்துப்பூர்வமாக அவர் உறுதி அளித்து சென்றதாக கூறப்படுகிறது. எனினும் அடுத்த சில நாட்களிலேயே எந்தவித முறையான விவாகரத்தும் அளிக்காமல் வனிதா விஜயகுமாரை பீட்டர் பால் திருமணம் செய்தார்.
ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு
இதனிடையே, வனிதா – பீட்டர் பால் திருமணம் நடைபெறுவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்புகூட காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டு, அவர்களின் திருமண ஏற்பாடுகள் குறித்து புகார் அளித்தும், அதனை ஆய்வாலர் அலட்சியப்படுத்தியதால் தற்போது இருவரும் திருமணம் செய்துகொண்டதாக எலிசபெத் ஹெலன் குற்றம்சாட்டியுள்ளார். ஆய்வாளரின் அலட்சியப்போக்கினால் தான் வனிதா – பீட்டர் பாலுக்கு திருமணம் நடந்ததாகவும், காவல் ஆய்வாளர் வனிதாவிற்கு சாதகமாக செயல்படுகிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.

முறையான விசாரணை வேண்டும்
எனவே சம்மந்தப்பட்ட ஆய்வாளரை மாற்றி, இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்புப் பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் எலிசபெத் ஹெலன் புகார் அளித்துள்ளார்.















































