தமிழகத்தில் மாணவ – மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வகுப்பு வழக்கு
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. ஆனால் ஆன்லைன் வகுப்பின் போது ஆபாச விளம்பரங்கள் வருவதால் அவர்கள் கவனம் சிதைவதாகவும், அந்த இணையதளங்களை மாணவ, மாணவிகள் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
தடை விதிக்க மறுப்பு
இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், மாநில அரசு சார்பில் பிரத்யேக கல்வி சேனல் நடத்தப்படுவதாக தெரிவித்தார். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.
நீதிபதிகள் உத்தரவு
ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த விதிகள் வகுக்கும் திட்டம் உள்ளதா? என அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குப்படுத்த என்னென்ன விதிமுறைகள் கொண்டு வரப்படும்? என்பது குறித்து இரண்டு வாரங்களில் மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.