போதைப் பொருள் வழக்கில் கைதான பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போதைப் பொருள்
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் விஜய்யின் பீஸ்ட், ஜிகர்தண்டா–2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், அஜித் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் ஷைன் டாம் சாக்கோ போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார்.
கைது
இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் விடுதியில் கேரள போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது, விடுதியில் இருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி செல்வதாக சொல்லும் சிசிடிவி காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத்தொடர்ந்து ஷைன் டாம் சாக்கோ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், எர்ணாகுளம் காவல்நிலையத்தில் அவர் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், ஷைன் டாம் சாக்கோவை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.
அனுமதி?
போலீசாரின் விசாரணையின்போது தான் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகவும், அதில் இருந்து விடுபட உதவ வேண்டும் என ஷைன் டாம் சாக்கோ அதிகாரிகளிடம் கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து தொடுபுழாவில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.