சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான வேட்டையன் திரைப்படம் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலை விடக் குறைவு என்று தகவல் வெளியாகியுள்ளது.
‘வேட்டையன்’
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. ரஜினியின் 170வது படமான இதை, ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கி உள்ளார். ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
கலவையான விமர்சனம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வேட்டையன் திரைப்படம் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. பிரபலங்கள் பலர் வேட்டையன் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசித்தனர். சென்னை தேவி திரையரங்கில் நடிகர் விஜய் வேட்டையன் படத்தைப் பார்த்துள்ளார். இந்நிலையில் முதல்நாளில் வேட்டையன் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.70 கோடி அளவுக்குதான் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரஜினியின் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலை விடக் குறைவு. ஆனால் தொடர் விடுமுறை என்பதால் படம் நல்ல வசூலைக் குவிக்கும் என சொல்லப்படுகிறது.