தமிழகத்தில் ஜூன் 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரெட் அலர்ட்

தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதை அடுத்து கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடாகா ஆகிய தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் தமிழகத்தில் அதி கன மழை பெய்யும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. மேலும் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் கேரள மாநிலத்திலும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மலப்புரம், கோழிக்கோடு மற்றும் கண்ணூரில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இடி மின்னலுடன் மழை

இதனிடையே, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெயிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் மாலை – இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° – 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

21 முதல் 25 ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here