”கண்ட விஷயத்தை வைரல் ஆக்குவதற்கு பதில் இதை ஆக்குங்கள்” என சின்னத்திரை நடிகை ரசித்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. 
திறமையானவர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் எத்தனையோ சரவணன் கதாபாத்திரம் மாறினாலும், இறுதிவரை ரச்சிதா மட்டுமே மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலில் கிடைத்த புகழால் அவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. தமிழில் ‘உப்பு கருவாடு’, கன்னடத்தில் ‘பாரிஜாதா’ ஆகிய படங்களில் ரிச்சிதா கதாநாயகியாக நடித்துள்ளார்.
சின்னத்திரையில் சாதனை
பெங்களூரில் பிறந்து வளர்ந்த ரச்சிதா, கன்னட சேனலில் ஒளிபரப்பான ’மேக மந்தரன்’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதனைதொடர்ந்து 5 கன்னட சீரியல்கள், 2 தெலுங்கு சீரியல்களில் நடித்துவிட்டு, 2011-ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த தினேஷ் என்பவரை ரச்சிதா காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பிரிவோம் சந்திப்போம் 2, சரவணன் மீனாட்சி, இளவரசி, மசாலா குடும்பம் உள்ளிட்ட தமிழ் சீரியல்களில் அவர் நடித்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான ஜூனியர் சீனியர், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0 ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் இடம்பெற்றிருந்த ரச்சிதா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசக் கூடியவர்.
இன்ஸ்டா பதிவு
தினேஷுக்கும் ரச்சிதாவுக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்துவேறுபாடுகள் காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு இவர்கள் பிரிந்தார்கள். கடந்த சில தினங்களாகவே ரச்சிதா மஹாலக்ஷ்மி பிரபல இயக்குனர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்ய போவதாக சில தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து ரச்சிதா மஹாலக்ஷ்மி எந்த ஒரு தகவலையும் பகிராமல் இருந்தார். இதனிடையே, புதிதாக அவர் நடித்துவரும் தமிழ் படத்தில் அவரின் லுக் போட்டோக்களை பகிர்ந்த ரச்சிதா, அதன் கேப்ஷனில் ‘கண்ட விஷயத்தை வைரல் ஆக்குவதற்கு பதில் இதை ஆக்குங்கள்’ என கூறியிருந்தார். 
நாங்கள் இருக்கோம்
நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி அதில் மேலும் பதிவிட்டுள்ளதாவது: “இந்த தினத்தில் RM கிரியேஷன்ஸ் என்கிற பட தயாரிப்பு நிறுவனத்தை உங்களிடம் அறிமுகப்படுத்துவதில் ஆனந்தம் அடைகிறேன். கனவுகளோடு இருக்கும் பட இயக்குனர்களின் கதையை கேட்க நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களது கனவுகளை நினைவாக்க நாங்கள் இருக்கிறோம். லட்சியத்தோடு படம் செய்ய வேண்டும் என்ற ஆசையோடும் இருப்பவர்களின் கதைகளையும் கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்” என பதிவிட்டு இருக்கிறார்.















































