சாக்‌ஷி மாலிக்கைப் போன்ற ஒரு அடையாளமிக்க நபர் திடீரென இதுபோன்ற முடிவெடுத்ததை கண்டு மனம் உடைந்து போவதாக நடிகை ரித்திகா சிங் தெரிவித்துள்ளார்.

பாலியல் புகார்

மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதனை கண்டித்து மிகப்பெரிய போராட்டங்கள் நடந்தன. இந்தப் போராட்டங்களில் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக் முக்கிய பங்கு வகித்தவர். இதையடுத்து பல்வேறு சர்ச்சைகள் மற்றும் போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகினார். அதைதொடர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு கடந்த 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

திடீர் விலகல்

இந்தத் தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய நண்பரான சஞ்சய் சிங் தலைவராக வெற்றி பெற்றார். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அதிரடியாக அறிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சாக்‌ஷி மாலிக், இதயத்திலிருந்து தான் போராடியதாகவும், ஆனால் பிரிஜ் பூஷண் போன்ற ஒருவரான சஞ்சய் சிங் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்திருந்தார்.

மனம் உடைந்தது

சாக்‌ஷி மாலிக்கின் இந்த திடீர் முடிவு குறித்து, நடிகையும், முன்னாள் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரருமான ரித்திகா சிங், சமூக வலைதளப் பக்கத்தில் வேதனையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; “சாக்‌ஷி மாலிக்கைப் போன்ற ஒரு அடையாளமிக்க நபர், இப்படி முடிவெடுத்ததை பார்க்கும் பொழுது மனம் உடைந்தது. இந்தியாவில் பலரை பெருமைப்படுத்திய ஒரு ஒலிம்பிக் வீரர், தனது நம்பிக்கைகளையும் கனவுகளையும் கைவிட்டு, பல வருட கடின உழைப்பையும் கைவிட்டு ‘நான் விலகுகிறேன்’ என சொல்வது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. முதலில் போராட்டத்தின் போது அவர் பட்ட அவமரியாதை. அதை தொடர்ந்து இது” என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here