ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி என தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மோசமான நிலை
தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; என் உடல் நலனை விட மக்கள் நலனே முக்கியம், தாய் தமிழ்நாட்டின் நலனே முக்கியம். இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது. மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் பொறுப்பு. விளக்கம், சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம். ஒருபோதும் அவர் கோரிய விளக்கங்கள் கொடுக்கப்படாமல் இருந்ததில்லை.
அவமதிப்பு
தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டையும், மக்களையும் அவமதித்துள்ளார். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி. ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும், அவசர அவசரமாக இந்த சட்ட மசோதாக்களுக்கு எவ்வித ஒப்புதலும் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த 10 சட்ட மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது”. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.