உயர் நீதிமன்றம் அளித்துள்ள ட்ஹீர்ப்பு நீதிக்கும், தர்மத்திற்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வழக்கு
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 11ல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும் எனவும், தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டது. இதையடுத்து ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த மனுக்கள் மீது 7 நாட்கள் நடந்த வாதத்திற்கு பிறகு, ஜூன் 28 ல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர்.
தீர்ப்பு
அதில், அதிமுக தீர்மானங்களுக்கு எதிரான ஓபிஎஸ் உள்ளிட்டோரின் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால், தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும் தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
ஒருபோதும் ஏற்க மாட்டோம்
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; “அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. 2024 மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவது தவறான விஷயம். கோடநாடு விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தோம். ஜெயலலிதா ஓட்டுநராக கனகராஜ் ஒருபோதும் பணியாற்றியது இல்லை. கட்சிக்கு எதிரானவர்களை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது” என்று தெரிவித்தார்.